ஈரோடு மாவட்ட காவல்துறை வாகன விதிமீறல் வழக்குகளில் அதிக வழக்குகள் பதிவு செய்து மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இதுபற்றி மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் கூறியதாவது,
ஈரோடு மாவட்டத்தில் சென்றாண்டு நடந்த 180 சாலை விபத்துகளில் 203 பேர் இறந்துள்ளனர். இது 2018 ஆண்டை விட 44 சதவிகிதம் குறைவு. சாலை விதிமுறை மீறல் தொடர்பாக மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.
ரூபாய் இரண்டு கோடியே 44 லட்சத்து எட்டாயிரத்து 463 ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளோம்.. குடிபோதையில் வாகன ஓட்டியதில் இரண்டாயிரத்து 420, மற்றும் அதிவேக வாகன இயக்கம் நான்காயிரத்து 112 அதே போல் அதிக பாரம் ஏற்றியது 263, அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றியது ஐந்தாயிரத்து 379, மொபைல் போன் பேசியவாறு வாகன இயக்கம் 17 ஆயிரத்து 650, ஹெல்மெட் அணியாமல் சென்றது இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 817, சீல் பெல்ட் அணியாமல் சென்றது 34 ஆயிரத்து 953 என்பதோடு இதர வழக்குகள் 72 ஆயிரத்து 105 பதிவு செய்யப்பட்டன.
கடந்தாண்டு சாலை விதிகளை மீறி விபத்துகளை ஏற்படுத்தியதாக 23 ஆயிரத்து 438 ஏறக்குறைய 24 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் லேடீஸ் பர்ஸ்ட் என்ற திட்டம் 2019 மே 11ல் துவங்கியது. இதில் ஆயிரத்து 396 அழைப்புகள் வந்துள்ளன. அதேபோல் ஹலோ சீனியர்ஸ் திட்டம் கடந்தாண்டு ஜனவரி 15 ல் துவங்கியது. அதில் ஆயிரத்து 138 மனுக்கள் வந்தன.
இதில் மொத்தமாக ஆயிரத்து 102 புகார் மனு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இரண்டு ஆதாய கொலை, ஒரு கூட்டு கொள்ளை, 12 கொள்ளை, 26வழிப்பறி, 263 திருட்டு வழக்கு என மொத்தம் 412 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்ற செயல்களால் ரூபாய் ஐந்து கோடியே 80 லட்சம் அளவுக்கு சொத்து கொள்ளை போனது. இதில் நான்கு கோடியே 79 லட்சம் சொத்துகளை நாங்கள் மீட்டுள்ளோம்.
குற்ற சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு சப்–டிவிசன் வாரியாக ஈரோட்டில் 169, பெருந்துறையில் 76, பவானிக்கு 47,கோபியில் 71, சத்தியமங்கலத்திற்கு 46 என மொத்தம் 409 இடங்களில் கேமராக்களை பொருத்தியுள்ளோம்.
தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நகை கடைகள், பெட்ரோல் பங்க்களில் சப்–டிவிசன் வாரியாக சி.சி.டி.வி கேமராக்கள் ஈரோட்டில் மூவாயிரத்து 970, பெருந்துறையில் ஆயிரத்து 639, பவானியில் ஆயிரத்து 380, கோபிசெட்டிபாளையத்தில் மூவாயிரத்து 740, சத்தியமங்கலத்தில் 803 என மொத்தம் 11 532 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரில் குற்றசம்பவங்களை தடுக்க, கண்காணிக்க ஐந்து இடங்களில் நவீன முறையில் ஸ்பீடு டூம் கேமரா பொருத்தப்பட்டுள்ளது" என கூறினார்.