மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதில் பல்வேறு இடங்களில் திமுக- அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சில இடங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே திமுக வேட்பாளர்கள் வென்றனர். இதனைத் தொடர்ந்து தலைமையின் அறிவிப்புக்கு மாறாக செயல்படுவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் சில இடங்களில் குற்றச்சாட்டை வைத்தன. "கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும்" என அதிரடி அறிக்கை விட்டிருந்தார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில் நெல்லிக்குப்பம் நகர் மன்ற துணைத்தலைவர் பதவியிலிருந்து திமுகவின் ஜெயப்பிரபா ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் கணேசனிடம் ஜெயப்பிரபா கடிதம் அளித்துள்ளார். நெல்லிக்குப்பம் நகர மன்ற துணைத்தலைவர் பதவி கூட்டணிக் கட்சியான விசிகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது. முதல்வரின் அறிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.