சென்னையில் பள்ளி மாணவன் பள்ளி பேருந்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அப்பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார் திருநகரில் வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த தீட்சித் என்ற 8 வயது மாணவன் இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான். பள்ளி பேருந்தில் சென்ற மாணவன் பேருந்திலிருந்து இறங்கி நடந்த நிலையில் பேருந்தில் தனது பொருள் ஒன்றை விட்டுவிட்டதாக மீண்டும் பேருந்தை நோக்கி நகர்ந்துள்ளான். அப்பொழுது பேருந்து ஓட்டுநர் பேருந்தை வலதுபுறமாக திருப்பியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக மாணவன் தீட்சித் மீது பேருந்து சக்கரங்கள் ஏறி சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவத்தில் பள்ளி பேருந்து ஓட்டுநர் பூங்காவனம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் தலைமையிலான அதிகாரிகள், அம்பத்தூர் வருவாய்த்துறை அதிகாரி இளங்கோ, துணை காவல் ஆணையர் மீனா ஆகியோர் பள்ளிக்கே நேரடியாகச் சென்று இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் பள்ளி பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் பெண் பணியாளரிடமும் விசாரணை நடைபெற்றது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக இன்றைக்குள் அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகிய மூன்றுபேர் மீதும் கொலையாகாத மரணத்தை விளைவித்தல் பிரிவின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.