Skip to main content

“விஜய்யை பார்த்து ஆளும் கட்சி அஞ்சுகிறது” - நயினார் நாகேந்திரன் 

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
Nainar Nagendran said that TN govt should give permission for the TVK conference

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் சமீபத்தில் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சி கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாக தெரிவித்த அவர் கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார்.

இந்த நிலையில் த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனுமதி கேட்டு த.வெ.க சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த மாதம் 28 ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து மாநாடு தொடர்பான 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்க புஸ்ஸி ஆனந்த் வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.  அதன் பிறகு இன்று மாநாடு தொடர்பாக காவல் துறையினரின் 21 கேள்விகளுக்கு த.வெ.க. சார்பில் பதில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மனுவில், “மாநாட்டில் 50, 000 இருக்கைகள் போடப்படவுள்ளன. ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்படவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடகா, ஆந்திரா என மற்ற மாநிலங்களில் இருந்தும் தொண்டர் வருவார்கள். நண்பகல் 12 மணி முதல் இரவு 10 வரை மாநாடு நடைபெறும். மாலை 6 மணியில் இருந்து விஜய் பேசும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எந்த அரசியல் கட்சித் தலைவரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றும்  பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல் துறையினரின் அனுமதி கிடைத்தவுடன் மாநாடு திட்டமிட்டபடி மாநாடு ஏற்பாடுகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விஜய்யின் த.வெ.க மாநாட்டிற்கு அரசு அனுமதி அளிக்காமல் அலைக்கழிப்பதாக்க பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “நடிகர் விஜய்யை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது. விஜய் மாநாட்டிற்கு அனுமதி வழங்கினால் எந்த பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சி தொடங்கினாலும், அதற்குச் சுதந்திரம் உண்டு. கண்டிப்பாக இந்த மாநாட்டிற்குத் தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்