குழந்தைகள் மையங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு விடுதிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாலியல் உள்ளிட்ட பொதுவான குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த்,
"தமிழகத்தின் திருமுல்லைவாயில் காப்பகத்தில் நடைபெற்ற சம்பவம் போன்று இனி நாட்டில் எங்கும் தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்காக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் காப்பகங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் மையங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுக்களானது புதுச்சேரியில் உள்ள 60 காப்பகங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு 15 நாட்களுக்குள் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்திற்கு அறிக்கை சமர்பிக்க உள்ளன. ஆணையத்தின் தேசிய உறுப்பினர்களும் காப்பகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளனர்" என்றார். மேலும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் புதுச்சேரியில் குழந்தைகளுக்கு எதிராக 18 பாலியல் புகார்கள் வந்துள்ளதாகவும் ஆனந்த் கூறினார்.