திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம் கச்சேரி தெருவை சேர்ந்தவர் ரித்திக் ஷா. ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி கயல்விழி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் 6 வயது மகன் கவுரவ்ஷா.
கவுரவ்ஷா அங்குள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். திங்கட்கிழமை காய்ச்சலின் தீவிரம் அதிகமானது. இதனையடுத்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவம்பர் 26 ந்தேதி காலை கவுரவ்ஷா இறந்தார்.
அரசாங்கத்தால் மர்ம காய்ச்சல் என சொல்லப்படும் டெங்கு காய்ச்சல் அந்த பகுதியில் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் டெங்கு காய்ச்சலால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகளவில் டெங்கு பாதிப்புள்ள மாவட்டம் வேலூர் என்பது குறிப்பிடதக்கது.