தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களிலும் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்குன்றத்தில் 28 சென்டிமீட்டர் மழையும், ஆவடியில் 26 சென்டிமீட்டர் மழையும், பொன்னேரியில் 16 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தாமரைப்பாக்கத்தில் 16 சென்டிமீட்டர் மழை, கும்மிடிப்பூண்டியில் 9.5 சென்டிமீட்டர் மழை, ஊத்துக்கோட்டையில் 9.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்திற்கான நீர் வரத்து என்ற அளவில் காவிரி ஆற்றில் பெய்த கனமழை காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. முன்னதாக வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி என்ற அளவில் இருந்த நீர்வரத்து தற்போது மழைப்பொழிவு காரணமாக 18000 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் நான்காவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 863 கன அடியாக உள்ளது. நீர் திறப்பு 134 கன அடியாக உள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,286 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியை பொறுத்தவரை 3,471 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட நிலையில் நீர் இருப்பு 2,326 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 219 கன அடியாக உள்ளது.