விடிந்தும், விடியாத அந்த அதிகாலைப் பொழுது அவ்வளவு ஈசியாக இருக்கவில்லை நீலாங்கரைப் போலீஸிற்கு.! எங்கிருந்தோ மிகுந்த வேகத்தில் வந்த கார் சாலையில் ஓரமாய் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோவினை இடித்து சுக்கு நூறாக்கிய நிலையில் அந்த வண்டியை இயக்கி வந்த ஹேங் ஓவர் போதைக்காரன் அங்கு கூடியிருந்த கூட்டத்தினிடமும், பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வர எண்ணிய போலீசாரிடமும் முறைத்துக் கொண்டு அடாவடியாக நடந்துக் கொண்டது வாட்ஸ் அப்பில் வைரலாக, " இந்த அமைச்சரின் மகன் தான் இவன்." என வாட்ஸ் அப்பில் வைரலானது. அமைச்சரே தவறான வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க அமமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது சைபர் கிரைம் போலீஸ்.
மதுரை வெள்ளங்குடி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் புகழேந்தி. வெளிநாட்டிற்கு பழங்களை ஏற்றுமதி செய்துவரும் இவரின் மகன் பிரச்சனைக்குரிய நீலாங்கரை அடாவடிப் பேர்வழியான நவீன். 30 வயதான நவீன் திருவான்மியூர் ராஜா சீனிவாசன் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஏற்றுமதி வியாபாரத்தைக் கவணித்து வந்துள்ளார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவினில் வீட்டை விட்டு சென்றவர், உற்சாகபான மயக்கத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலைப் பொழுதில் TN59BJ3038 பதிவெண் கொண்ட தன்னுடைய ஹூண்டாய் வெரினா காரினை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் பொழுது சாலையிலிருந்த ஆட்டோவினை இடித்து சுக்கு நூறாக்கியிருக்கின்றார். அங்கிருந்த மக்கள் காரினை சூழ்ந்து கொள்ளவே, இவரும் அவர்களுடன் மல்லுக்கட்டியிருக்கின்றார். ஒருக்கட்டத்தில் இப்பிரச்சனையை சமாளிக்க நீலாங்கரை ஏட்டையா இளவரசன் மற்றும் ஒரு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார் எஸ்.எஸ்.ஐ.பழனி. ஆனால், அவர்களுடனே மல்லுக்கட்டியிருக்கின்றார் போதைப் பார்ட்டி நவீன். ஒருக்கட்டத்திற்கு பிறகு நவீனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவர் மீது 294(b).353.506(1) ipc பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. அத்துடன் இல்லாமல் பாத்ரூமிற்கு செல்லும் போது வழுக்கி விழுந்துவிட்டான் என நவீனின் கை உடைந்த புகைப்படத்தையும் பத்திரிகைகளுக்கு அளித்தது.
இதே வேளையில், காவல்துறையிடமும், பொதுமக்களிடமும் மதுமயக்கத்தில் தகராறு செய்த நவீனின் வீடியோவினை சமூக வலைத்தளங்களில் பரவ செய்து " இவன் சசிகலா முதல்வராக்கும் முயற்சியின் போதும், ஓ.பி.எஸ்.தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த போதும் மித மிஞ்சிய உற்சாகப் பானத்தில் பத்திரிகைகளை அர்ச்சித்த அமைச்சரின் மகன்" என மறைமுகமாகவும், இன்னாரின் மகன் என நேரிடையாகவும் வைரலாக்கினர் சிலர். இது உண்மையா.? என நீலாங்கரை போலீசாரை கேள்வி மேல் கேட்டு நிம்மதியை குலைத்துக் கொண்டிருந்தனர் நெட்டிசன்கள். " இல்லையில்லை.! அமைச்சரின் மகன் என்றால் கையை உடைத்திருப்பார்களா.? இவன் வேறு.?" என அந்த வதந்திக்கு வக்காலத்து வாங்கி வந்தனர் சிலர்.
இவ்வேளையில், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகமோ, "என்னைக் குறிவைத்து தவறான வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க, அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே அமமுக பிரமுகர் மீது சென்னை மத்திய சைபர்கிரைம் போலீஸ் இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வதந்திக்கு வாய்ப்பூட்டுப் போட்டது.