கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று, தக்கலை வெளிமலை குமாரசாமி கோயில். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் மக்கள் நலமுடன் வாழ வருடந்தோறும், கார்த்திகை மாதத்தில் வரும் இறுதி வெள்ளிக்கிழமையில் காவடி எடுத்து ஊர்வலமாக, நேர்த்திக்கடன் செலுத்துவது இந்தக் கோவிலில் வழக்கம்.
மக்கள் நலமுடன் வாழ்வதற்காக, மன்னர் காலத்தில் பின்பற்றி வந்த, இந்த நடைமுறையானது தற்போதும் பாரம்பரியமாகத் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. விவசாயம் செழிக்கவும் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும் பல்வேறு (காவல்துறை, பொதுப்பணித்துறை) துறையினர் சார்பில், காவடி எடுக்கும் நிகழ்வு வருடா வருடம் நடைபெறுகிறது. யானை மீது பால்குடம், வேல் காவடி, புஷ்ப காவடி எனப் பல்வேறு விதமான காவடிகள் இந்த விழாவில் இடம்பெறும்.
வெகு விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, கரோனா காரணமாகப் பல கட்டுப்பாட்டு விதிகளுடன் நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணத்தால் யானை ஊர்வலம், பறக்கும் காவடி போன்றவைகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் இந்த வருடம் 100-க்கும் மேற்பட்ட காவடிகள் எடுக்கப்பட்டது. ராமன்பாம்பு முட்டைக்காடு, பத்மநாபபுரம், ராமன்பரம்பு, வலியகரை, தென்கரை, வெட்டிகோணம், குலசேகரம், இரணியல், கோணம், வழுக்கலம்பாடு, முத்தலக்குறிச்சி, தக்கலை பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளைச் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர்.