சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது பற்றி தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளருமான கே.என்.நேரு பேசியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி சர்ச்சையானது.
வீடியோ தொடர்பாக, திருச்சி மாவட்ட முசிறி காவல்துறையினர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தப் புகார் அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டிருப்பதால் வழக்கை ரத்து செய்யக்கோரி கே.என்.நேரு முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். கே.என்.நேரு தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கே.என் நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, அந்த வீடியோவில் உள்ளதைப் போன்று ஒரு சம்பவம் நடைபெறவேவில்லை எனவும், பொய் எனவும், அரசியல் ஆதாயத்திற்காக அதுபோன்று ஒரு வீடியோ பரப்பப்படுவதாகவும், எந்தவித முகாந்திரமும் இன்றி கொலை மிரட்டல் பிரிவையும் சேர்த்து இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
வீடியோவில் யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை, யாரையும் மிரட்டவில்லை என்பதைையும், ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளிளான குற்றச்சாட்டுகள் தான் என்பதைையும் குறிப்பிட்டு நேருவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.