
எவ்வித வழக்கோ, நீதிமன்ற உத்தரவோ இல்லாமல், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மாவட்டச் செயலாளர் பாப்பாத்தியை வீட்டுக் காவலில் வைத்தற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள், குழந்தைகள் மீது அதிகரித்துவரும் வன்முறைகளைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கி குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும், போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும்.
கல்வி நிலையங்களில் பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை விவாதிக்க சிறப்பு சட்டமன்ற அமர்வை நடத்த வேண்டும், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சென்னையில் நேற்று பேரணி நடத்தியது. மாதர் சங்கம் நடத்திய பேரணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. மாதர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்ற பேரணிக்கு மாநிலம் முழுவதிலுமிருந்தும் பெண்கள் சென்னைக்கு வந்தனர். அந்த முறையில் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தோழர் பாப்பாத்தி அவர்களும் சென்னை பேரணியில் கலந்து கொள்ள புறப்பட்டபோது அவர்களை எவ்வித வழக்கோ, நீதிமன்ற உத்தரவோ இல்லாமல், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வீட்டுக் காவலில் வைத்தது வன்மையான கண்டனத்திற்குரியது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் தலையிட்ட பிறகும் தோழர் பாப்பாத்தி அவர்களை விடுவிக்க மறுத்து காவல்துறை தகராறு செய்தது மிக மோசமான செயலாகும். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.