ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சி 13-வது வார்டு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு பேரூராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதமாக குடிநீா் முறையாக விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடிநீர் முறையாக விநியோகிக்க கோரி பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று நசியனூர் பேரூராட்சி சார்பில் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வண்டி வந்தது. அப்போது, பெரியார் நகரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் காலிக்குடங்களுடன் நசியனூர் - ஈரோடு சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், நசியனூர் பேரூராட்சி சார்பில் எங்கள் பகுதிக்கு கடந்த மூன்று மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் நாங்கள் பல்வேறு வகையில் அவதி அடைந்து வருகிறோம். குடிநீர் குழாய்கள் மூலமாக தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும், வாகனங்கள் மூலமாகவே குடிநீர் வழங்கி வருகின்றனர். எங்களுக்கு வாகனங்கள் மூலமாக குடிநீா் வழங்காமல், வீட்டு இணைப்புகளில் உள்ள குழாய்களில் குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சித்தோடு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கை குறித்து சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்படும். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் எடுத்து செல்லப்பட்டு, விரைவில் தீர்வு காணப்படும் என போலீசார் கூறினர். இதனால், சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.