![The minister's interview after the ongoing heavy rain survey](http://image.nakkheeran.in/cdn/farfuture/RVZksowrHtZrA4lykwPfRzKN6QDvkgcQoeaRi_yLkOk/1687171242/sites/default/files/inline-images/11_236.jpg)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னையைப் பொருத்தவரை ஜூன் மாதம் என்பது மழை பொழியும் மாதமாக இல்லாத காரணத்தால் அம்மாதத்தில் மொத்தமாகவே 50 முதல் 60 மிமீ மழையே சராசரியாக பொழிந்துள்ளது.
இதையடுத்து தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான அறிவிப்பில் தமிழக கடற்கரை பகுதி, குமரி கடல் பகுதி, தென் மேற்கு வங்க கடல், மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வரையில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே மீனவர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யும். அடுத்து வரும் 2 அல்லது 3 தினங்களுக்கு மழை தொடரும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை வியாசர்பாடி, கணேசபுரம் ஆகிய பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை தயாராக உள்ளது. மழை பெய்து கொண்டிருக்கும் போது மழை நீர் தேங்கியுள்ளது என்று சொல்ல முடியாது. மழை நின்ற பின் அரை மணி நேரத்திற்குப் பிறகும் நீர் தேங்கினால் மழை நீர் தேங்கியுள்ளது என்று கூறலாம். 260 நீர் வெளியேற்றும் மின் மோட்டார்கள் தயாராக உள்ளன. மழை பெய்து நின்ற பின் தண்ணீர் தேங்காது. உடனுக்குடன் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது" என்றார்.