
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிக் கொள்கையை தினிப்பதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “மாணவர்களிடையே போட்டியை உருவாக்க, சமமான நிலையை உருவாக்க, நாம் ஒரு பொதுவான தளத்திற்கு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை என்பது புதிய லட்சியப் பொதுத் தளம் ஆகும். நான் எல்லா மொழிகளையும் மதிக்கிறேன். பிரதமர் மோடியின் யோசனையில் வடிவமைக்கப்பட்ட இந்த தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் தமிழ் ஒன்றாகும். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு?. அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளாக இருக்கலாம். அவர்கள் மீது இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் திணிக்கவில்லை. இது தொடர்பாக தமிழ்நாட்டில் சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையின் கீழ் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் சில நிபந்தனைகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.