Skip to main content

மாணவர் மரணம்; “காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது” - இபிஎஸ்

Published on 17/02/2025 | Edited on 17/02/2025

 

EPS condemns thirunelveli engineering student incident

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் (21) என்ற இளைஞர், போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்த சூழ்நிலையில், கடந்த 13ஆம் தேதி அன்று விடுதி கழிவறையில் மர்மமான முறையில் விக்னேஷ் உயிரிழந்து கிடந்தார். அந்த கழிவறை முழுவதும் ரத்தக் கறை படிந்திருந்ததால், பெரும் சந்தேகத்தை கிளப்பியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது,  “திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, ‘எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்’ என்று பொறுப்பற்ற முறையில் ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்டாலின் மாடல் தி.மு.க ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது. இசிஆர் வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற தி.மு.க கொடி கட்டிய குற்றவாளி; இப்போது, எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது. பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவன் விக்னேஷின் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைத்து திசை திருப்ப ஸ்டாலின் மாடல் திமுக அரசு முயற்சிக்குமாயின், அது கடும் கண்டனத்திற்குரியது. மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு 
மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்