திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி இன்று (10.02.2024) முதல் தொடங்கியுள்ளது. இந்த மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 150 ரூபாயும், குழந்தைகளுக்கு ரூ. 75 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் 28 வகையிலான சுமார் 12 லட்சம் மலர்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியை பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. மேலும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மலர் கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி மற்றும் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மலர் கண்காட்சி சுமார் 10 நாட்கள் வரை நடைபெறும் என தோட்டக்கலை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடக்க விழாவில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா எனப் பலரும் கலந்து கொண்டனர்.