கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருபவர் மணிவேல் (வயது 33). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிவேல் கடந்த 22 ஆம் தேதி காலை 8.30 மணியளவில், ஆயுதப்படை மைதானம் அருகே குட்டூரில் உள்ள இளையராஜா என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த கைப்பேசி கோபுரத்தின் மீது காவலர் சீருடையுடன் 150 அடி உயரத்திற்கு ஏறிய அவர், திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏடிஎஸ்பி சங்கு, டிஎஸ்பி தமிழரசி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்களுடன் அங்கு விரைந்து சென்ற காவலர்கள், மணிவேலிடம் தற்கொலையைக் கைவிடும்படி கூறினார். அப்போது மணிவேல், ''பிப்ரவரி 9 ஆம் தேதி, நான் உட்பட 9 ஆயுதப்படை காவலர்கள் திடீரென்று கோவை சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். நான் இடமாறுதல் கேட்டு விருப்ப மனு கொடுக்காதபோது என்னை ஏன் இடமாற்றம் செய்ய வேண்டும்?. இது தொடர்பாக பிப்ரவரி 13ம் தேதி, கோவையில் ஐஜியை சந்தித்து நாங்கள் முறையிட்டோம். நீங்கள் தவறு செய்யாவிட்டால் எதற்காக உள்ள மாவட்ட எஸ்பி இடமாற்றம் செய்ய வேண்டும்? இதுகுறித்து நீங்கள் எஸ்பியை நேரில் சந்தித்துப் பேசுங்கள் என்று கூறினார். அதன்படி நாங்கள் எஸ்பியை நேரில் சந்தித்தோம். அவரும் எங்களை தொடர்ந்து இங்கேயே வேலை பார்க்கச் சொன்னார்.
ஆனால் ஆயுதப்படை உயர் அதிகாரிகளோ, உங்களைத்தான் கோவை சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதே. பிறகு ஏன் இன்னும் இங்கு வேலை செய்கிறீர்கள்? எனக்கேட்டு அழுத்தம் கொடுக்கின்றனர். 10 ஆண்டுகளாக நாங்களும் பல இடங்களில் பணியாற்றி விட்டுத் தான் இங்கு வந்திருக்கிறோம். இந்நிலையில் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக எங்களை இடமாற்றம் செய்துள்ளனர். அதனால்தான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன்,'' என்று கூறினார். அவரிடம் பேசிய ஏடிஎஸ்பி சங்கு, உங்கள் பிரச்சனை தொடர்பாக சுமூகமாகப் பேசி தீர்வு காணப்படும். கீழே இறங்கி வாருங்கள் என்று கூறினார். 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, மணிவேல் கீழே இறங்கி வர சம்மதித்தார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கைப்பேசி கோபுரம் மீது ஏறி, அவரை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் மணிவேல் உள்ளிட்ட 9 பேர் இடமாற்ற உத்தரவின் பின்னணியில் வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. ஆயுதப்படை பிரிவில் நடைபெறும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்டதால் தான் காவலர்கள் மணிவேல், பாலாஜி, ராஜேஷ், வினோத்குமார், சேட்டு, நேதாஜி, அருள்செல்வம், கலைவாணன், சரத்குமார் ஆகியோர் திடீரென்ற கோவை சரகத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். மேலும் காவலர் மணிவேல், எந்த வித காரணமுமின்றி எங்களை கோவை சரகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர் என்று கூறி ஒரு காணொளி பதிவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இதன்பிறகே அவர் கைப்பேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.