தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். முதல் நாளான நேற்று மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தகுதியானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, "பொதுப்பிரிவினருக்கான கௌரவ விரிவுரையாளர் பணிக்கான கலந்தாய்வு நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெறவுள்ளது. தகுதியானவர்கள் தரவரிசையின் அடிப்படையில் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கப்படும். தமிழகத்தின் நிதிநிலைமை சீரான பின்னர் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும். அடுத்ததாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்ட 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கை பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய கூட்டத்தில் தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொள்வதில் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கை குழு எடுக்கும் முடிவையே தமிழகத்தில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்கள் பின்பற்றும்" என்று பேசினார்.