காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் மூன்று பள்ளி மாணவர்கள் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ளது விழுதவாடி கிராமம். அங்குள்ள ஏரிக்கரையில் மூன்று சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற உத்திரமேரூர் போலீசார் மூன்று பேரின் சடலங்களை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டனர். மூன்று பேர் உடல்களிலும் பல இடங்களில் காயங்கள் இருந்தது. மேலும் உடல் அழுகியதால் மீன்கள் கொத்தியதில் சிதைந்து காணப்பட்டது.
மீட்கப்பட்ட மூன்று பேரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக கைப்பற்றப்பட்டது அரசுப் பள்ளி மாணவர்களான விஷ்வா, சத்ரியன் மற்றும் ஐ.ஐ.டி படித்து வந்த பரத் என்ற மூவரும் தெரியவந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு மாயமான மூவரையும் உறவினர்கள் மற்றும் பெற்றோர் தீவிரமாக தேடிவந்த நிலையில் அவர்கள் ஏரியில் சடலமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மூன்று மாணவர்களும் நண்பர்களாக சுற்றி வந்த நிலையில் கஞ்சா விற்பனையாளர்கள் சிலரோடு மூன்று பேரும் தொடர்பில் இருந்ததாக தெரிய வந்தது. மேலும் பைக்குகளை திருடி விற்றதாக மூன்று பேரையும் போலீசார் பிடித்து விசாரித்து மீண்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் மூவரும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். ஒருவேளை கஞ்சா விற்பனை கும்பலோடு ஏற்பட்ட மோதலில் இவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.