தை பிறந்தால் தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் பகுதி எங்குமே கோலாகல கொண்டாட்டம் தான். தை முதல் நாளில் தொடங்கும் கொண்டாட்டங்கள் மாதம் முழுவதும் நடக்கிறது. கலை இலக்கிய போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், வீர விளையாட்டுகள் என கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை.
அதேபோல தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போல புதுக்கோட்டை மாவட்டத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் பிரபலம் தான். கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் என சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் வழுக்கு மரம் ஏறுதல் சிறப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பொங்கல் விளையாட்டு விழா மற்றும் கலை, இலக்கிய போட்டிகள் நடத்தினார்கள். காலை முதல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் உயரமான மரத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடந்தது. பல அணிகள் நீண்ட நேரம் முயற்ச்சித்து ஏறினார்கள்.
இறுதியில் அலஞ்சிரங்காடு அணியினர் வழுக்கு மரத்தின் மேலே உள்ள இலக்கை தொட்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதே அணியினர் கடந்த 3 ஆண்டுகளாக இதே வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதாக பாராட்டப்பட்டனர். இந்த நிகழ்ச்சிகளை காண ஏராளமானோர் வந்திருந்தனர்.