பா.ஜ.க.வின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கரோனா பரவும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "தமிழகத்தில் அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகளால் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கரோனா அதிகமாக பரவும். கரோனா இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை. பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேல் யாத்திரையை பா.ஜ.க. கைவிடுவது நல்லது; சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் நிகழ்வது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது" இவ்வாறு அமைச்சர் கூறினார்.