தேவைப்பட்டால் அனுமதி பெற்று நானும் கரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்வேன் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுவிட்டு, மது அருந்தக்கூடாது. இரண்டாவது டோஸ் போடும் வரையில் 28 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது. கரோனா தடுப்பூசிப் போடுபவர்களைத் தனிமைப்படுத்த வேண்டாம். கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்குப் பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்" என்றார்.
அதைத் தொடர்ந்து, பிற நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்தின்போது அதிபர்கள், பிரதமர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "தேவைப்பட்டால் அனுமதி பெற்று நானும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்" என தெரிவித்தார்.