தமிழகத்தில் தற்போது கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு மாவட்ட சென்னை முதன்மை கல்வி அலுவலர் அனிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதேபோல், பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் இருவரிடமும் முதன்மை கல்வி அலுவலர் தொலைபேசி வாயிலாக விசாரணை மேற்கொண்டார். அவர்களிடமிருந்து விளக்கம் கிடைத்த பிறகு, பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அறிக்கை அளிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்தப் பள்ளியின் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனியார் தொலைக்காட்சி சேனலில் பேசியபோது, ''ஆசிரியர் தவறு செய்தது உறுதி எனில் அவரை பணிநீக்கம் செய்யவேண்டும். பத்மா சேஷாத்திரி பள்ளியில் இதுநாள் வரை இதுபோன்ற ஒரு சம்பவம் கூட நடந்தது இல்லை. இது போன்ற சம்பவங்களால் தன் தாயின் பெயர் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. ஆசிரியர் மீது விசாரணை நடத்த வேண்டும் என நேற்று இரவு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்'' எனத் தெரிவித்துள்ளார்.