Skip to main content

“பொள்ளாச்சி சம்பவம் குறித்துப் பொய் தகவல்களை முதல்வர் தெரிவிக்கிறார்” - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

Published on 08/01/2025 | Edited on 08/01/2025
RB Udhayakumar alleges the Chief Minister is giving false information about the Pollachi incident

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தொடரின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமலே சிறிது நேரத்திலேயே வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடனே தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.

அதனை தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவையில் 2வது நாள் அலுவல் தொடங்கியது. அப்போது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அதிமுக, காங்கிரஸ், பா.ம.க வி.சி.க சி.பி.ஐ, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் நோட்டீஸை சபாநாயகர் அப்பாவுவிடம் அளித்தது. 

இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அலுவல் இன்று (08-01-25) தொடங்கியது. அப்போது, ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, அண்ணா பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்றது. கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பேரவையில் ஒவ்வொருவரும் பேசி வந்தனர். இதனை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

அப்போது அவர், “சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுப்பதே அரசின் நோக்கம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று நியாயம் பெற்றுத் தருவதே அரசின் நோக்கம். குற்றம் நடந்த பிறகு குற்றவாளியை கைது செய்யாமல் விட்டிருந்தாலோ, குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ இந்த அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணி நேரத்திற்குள்ளே குற்றவாளியை கைது செய்த பிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகும், அரசை குறை சொல்வது அரசியல் ஆதாயத்துக்கானது தானே தவிர உண்மையான அக்கறையோடு செயல்படுவதில்லை. முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழக அரசு காரணமில்லை. ஒன்றிய அரசின் கீழ் செயல்படுகிற தேசிய தகவல் மையத்தினால் தான் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காரணம். அதை காவல்துறையாக உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டு அதன் பிறகு தொழில்நுட்ப கோளாறும் சரிசெய்யப்பட்டது. அது தொடர்பாக அந்த அமைப்பும் கடிதமும், விளக்கமும் கொடுத்திருக்கிறார்கள். 

கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று நினைத்து பாருங்கள். தொடர்ச்சியாக பல பெண்களுக்கு இரண்டு வருடமாக பாலியல் குற்றங்கள் நடந்திருக்கிறது. அன்றைய அதிமுக ஆட்சி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஐயிடம் அந்த வழக்கு சென்ற பிறகு தான் உண்மைகள் எல்லாம் வெளியே வந்தது. இது போல், 100 சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி” எனப் பேசினார். பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் பேசியதை கண்டித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். 

வெளியே வந்த அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் காவல் ஆணையரின் செயல் சந்தேகம் அளிக்கிறது. ஆரம்பக்கட்ட விசாரணையிலேயே ஒருவருக்குத்தான் தொடர்பு என்று ஆணையர் ஏன் சொன்னார்?. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பொள்ளாச்சி சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்தோம். இந்த சம்பவம் குறித்து பொய் தகவல்களை முதல்வர் தெரிவிக்கிறார். பொள்ளாச்சி சம்பவத்தை மேற்கோள்காட்டி அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை நியாயப்படுத்துகிறார்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்