குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தான் சந்தித்த ஒரு வழக்கு பற்றிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
”மேத்யூ ராஜன் என்பவரின் வழக்கு இது. சர்ச் ஆஃப் சைவுத் இந்தியா என்ற கிறிஸ்தவ ஸ்தாபனத்தை சேர்ந்த இவர் ரோமன் கத்தோலிக்க சபையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இருவரது காதல் வலுவாக இருந்ததால் அந்த பெண் தன்னை சி.எஸ்.ஐ. கிறிஸ்தவராக மாற்றிக்கொண்டு மேத்யூ ராஜனைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். பின்பு மேத்யூ திருமணத்திற்கு ரூ.6 லட்சம் வங்கியில் கடன் வாங்கி சந்தோஷமாக தன் காதலியைத் திருமணம் செய்து கொண்டார். பெண் வீட்டிலும் இரண்டரை பவுன் தங்கம் போட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியை உடனே வைக்காமல் சில நாட்கள் இரு வீட்டாரும் தள்ளி வைத்திருக்கின்றனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மேத்யூ ராஜன் உறவினர்களும் அவரது மனைவியின் உறவினர்களும் வந்துள்ளனர். அதில் கணவரின் சில உறவினர்களைப் பார்த்து அதிர்ச்சியான மனைவி, வந்திருக்கும் உறவினர்கள் என்ன முறை வேண்டும் என்று கணவரிடம் கேட்க, அதற்கு அவர் ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார். அந்த பதிலைக் கேட்டப் பிறகு ஆடிப்போன மனைவி, இருவருக்கும் இடையே சகோதர, சகோதிரி உறவு முறை வருகிறது என்பதைக் கணவரிடம் கூறுகிறார். இந்த விஷயம் தெரிந்த நாளிலிருந்து இருவரது மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டுள்ளது. அதனால் தாம்பத்திய உறவில் ஆர்வம் காட்டாமல் தங்களுக்குள் இடைவெளி ஏற்படுத்தியுள்ளனர். அதனால் தொட்டதுக்கெல்லாம் அடிக்கடி கணவர், மனைவி இடையே பிரச்சனை வந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டைகளால் மனைவிக்கு மேத்யூ ராஜன் மீது இருந்த காதல் போய்விடுகிறது. இதனால் அவரது குடும்பத்தையும் பிடிக்காமல் போய்விடுகிறது. இப்படிப்பட்ட குழலில் மேத்யூ மனைவி, தன்னுடைய நகைகளைக் கொடு என்றும் சொல்லி, தான் பிரியபோகவதாக கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு மேத்யூ, ஏன் இந்த அவசரம் இப்போதுதான் திருமணம் ஆனது. சில நாட்கள் பொறுமையாக இரு என்று கூற, அவரது மனைவி தன்னுடைய நகைகளைக் கணவர் தர மறுக்கிறார் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல் அதிகாரிகள் விசாரித்தபோது சகோதர, சகோதிரி உறவைப் பற்றிக் கூறிய மேத்யூ மனைவி, தனக்கு கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும் திருமணத்திற்காகச் செய்த செலவு மற்றும் நகைகள் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். அதே போல் மேத்யூ, மனைவியின் பொருட்களைத் தருவதாகக் காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்துள்ளார்.
இந்த சூழலில்தான் மேத்யூ என்னை சந்திக்க வந்து நடந்ததைக் கூறினார். பின்பு நான், அவரிடம் கிறிஸ்தவ மற்றும் இந்து திருமணச் சட்டமாக இருந்தாலும் தாம்பத்திய உறவில் இல்லாமல் இருந்தால் திருமணம் செல்லாது என்றேன். அதோடு கணவர், மனைவி இருவரும் சகோத்ர, சகோதரி உறவாக இருப்பதால் கிறிஸ்தவ திருமணம் சட்டம் 18,19 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்றேன். அந்த சட்டம் என்ன சொல்கிறதென்றால், திருமணம் செய்யும் மணமக்கள் நெருங்கிய உறவிலும் ஏதோ ஒரு வித உறவிலும் சகோதர, சகோதரியாக இருக்கும் பட்சத்தில் அதைத் தடுக்கப்பட்ட உறவினருக்கு இடையே நடக்கும் திருமணம் என்பதைக் கருத்தில் கொண்டு திருமணம் செல்லாது என்று சொல்லப்பட்டுள்ளது.
மேற்கண்ட சட்டப்பூர்வமான விஷயத்தை மேத்யூவிடம் கூறிய பிறகு, அவர் திருமணம் செல்லாது என்பதை புரிந்துகொண்டார். அதன் பின்பு சட்டப்படி அடுத்தகட்டமாகத் திருமணம் செல்லாது என்று நீதிமன்ற உத்தரவு பெற வழக்கு தொடர்ந்தோம். அதே போல் எதிர்பார்த்த தீர்ப்பு வந்ததோடு மனைவிக்கு கொடுக்க வேண்டிய நகைகளை கொடுத்த மேத்யூ பிரிந்து வாழ ஆரம்பித்தார். சகோத்ச்ர, சகோதரி உறவில் இருப்பவர்கள் தெரிந்தே திருமணம் செய்துகொண்டால், இந்து திருமணச் சட்டப்படி ஒரு மாதம் சிறை தண்டனையுடன் சேர்த்து அபராதம் கட்ட வேண்டும். எனவே திருமண வரன் தேடினால் உறவு முறையை முழுமையாக விசாரித்துவிட்டு திருமணம் செய்யுங்கள்” என்றார்.