நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட டிஐஜி வீ. வருண்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் அவதூறு தகவல்களை பரப்பி, உள்நோக்கத்துடன் சீமான் பேட்டியளித்து வருகிறார். இதனால் நானும், என் குடும்பத்தாரும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். அவர் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதுடன் அவர் ரூ. 2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில், டிஐஜி வருண்குமார் கடந்த டிச.30ம் தேதி ஆஜராகி, புகார் குறித்து சாட்சியம் அளித்தார். அத்துடன் புகார் தொடர்பான ஆவணங்கள், வீடியோ பதிவு (பென்டிரைவ்), பத்திரிக்கை செய்திகள் தன்னால் வழங்கப்பட்டது என்பதையும் டிஐஜி உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஜனவரி 7 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்ட நிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. டிஐஜி வருண்குமார் நேரில் ஆஜரானார். டிஐஜி தரப்பு சாட்சிகளாக புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியை சேர்ந்த கார்த்திக் ராஜா (33) , கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு சாட்சியங்களை பதிவு செய்தனர். வழக்கு விசாரணை ஜனவரி 21 ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்து டிஐஜியுடன் வெளியே வந்த அவரது வழக்குரைஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான வார்த்தைகளால் பேசியிருக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது இவ்வாறு கடுமையாக பேசுவது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்” என்றார்.