ஒரு ஜல்லிக்கட்டுக் காளை வயது முதிர்வு மற்றும் நோய் தாக்கத்தால் இறந்ததைக் கூட ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் க.பழனியாண்டி பரங்கி அவர்களின் சத்தியமங்கலம் மறைக்காளை. வயது 20. கடந்த ஆண்டு வரை பல களம் கண்டு பரிசுகளை வாரிக்கொண்டு வந்த காளை இது. கடந்த மாதங்களாக காளைக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் நேற்று (05/06/2018) செவ்வாய் கிழமை நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை செய்ய வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். காளையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது பலன் இல்லை என கூறியபின் காளையை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
இன்னிலையில் இன்று (06/06/2018) புதன் கிழமை காளை அவதிப்படுவதை காண முடியாமல் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்அங்கு கால்நடை மருத்துவர்களால் மதியம் வரை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் வயது முதிர்ந்த காரணமாகவும் நோயின் தீவிரத்தாலும் சிகிச்சை பலனின்றி மாலை மறைக்காளை உயிர் பிரிந்தது. இந்தக் காளை புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சை,தேனி ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு சென்று எந்த ஜல்லிக்கட்டிலும் பிடிபடாமல் அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் சவாலாக நின்று விளையாடி பீரோ, சைக்கிள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் போன்ற பலபல சிறப்பு பரிசுகளை வென்றுள்ளது.
ஜல்லிக்கட்டில் சத்தியமங்கலம் மறைகாளை வருகிறது என்றால் ஜல்லிக்கட்டு ஆர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காண்பர். வென்ற உடன் மகிழ்ச்சியில் ஆர்பரிப்பார்கள். இக்காளையின் இறப்பு ஜல்லிக்கட்டு ஆர்வாலர்களுக்கும் காளை வளர்த்தவர்களுக்கும் மிகுந்த வருத்தத்தையும் சோகத்தையும் அளிக்கிறது. பல களம் கண்ட வெற்றி வீரன் மறைக்காளையின் இறப்பை தாங்க முடியவில்லை என்றனர். காளையின் அடக்கம் பல்வேறு சடங்குகளுடன் (07/06/2018) அன்று காலையில் நடக்க உள்ள நிலையில் மறைக்காளைக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.