Skip to main content

நாடாளுமன்ற தேர்தல்:தொகுதியை அறிவோம் – அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குள், திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, இராணிப்பேட்டை, காட்பாடி என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர் என 3 தொகுதிகளில் அதிமுகவும், ஆற்காடு, இராணிப்பேட்டை, காட்பாடி என 3 தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றது.

 

election

 

1967ல் திமுக சம்மந்தம், 1971, 1977ல் காங்கிரஸ் அழகேசன், 1980ல் காங்கிரஸ் வேலு, 1984, 1989, 1991ல் காங்கிரஸ் ஜீவரத்தினம், 1996ல் தமாக வேலு, 1998 அதிமுக கோபால், 1999 திமுக ஜெகத்ரட்சகன், 2004ல் பாமக வேலு, 2009ல் திமுக ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றனர். இந்த தொகுதியில் 1977க்கு பின் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தே காங்கிரஸ் வெற்றி பெற்றுவந்துள்ளது. 2004ல் வெற்றி பெற்ற பாமகவும் திமுக கூட்டணியில் இருந்ததால் வெற்றி பெற்றது.

 

 

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுகவை சேர்ந்த ஹரி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஹரி பெற்ற வாக்குகள் 4,93,534, திமுக வேட்பாளர் இளங்கோவன் பெற்ற வாக்குகள் 2,52,768, பாமக வேட்பாளர் வேலு பெற்ற வாக்குகள் 2,33,762, காங்கிரஸ் நாசே.ராஜேஷ் பெற்ற வாக்குகள் 56,337 ஆகும்.

 

இந்த தொகுதியை பொருத்தவரை வன்னியர், தலித், முதலியார், இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ளனர். விவசாயம் தான் இந்த தொகுதி மக்களின் பிரதான தொழில், அதற்கடுத்து நெசவு தொழிலாகும். மேலும் தொழில் வளர்ச்சி உள்ள தொகுதியிது. அரக்கோணத்தில் ரயில்வே தொழிலாளர்களும், ராணிப்பேட்டை பகுதியில் டெல் உட்பட பல தொழிற்சாலைகளும், ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதியில் தோல் தொழிற்சாலைகள் பரவலாக உள்ளதால் தொழிலாளர்கள் அதிகமும்முள்ள தொகுதியாகவும் உள்ளது.

 

தற்போது இந்த தொகுதியில் சுமார் 14 லட்சத்துக்கு 74 ஆயிரத்துக்கு 133 பேர் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் சுமார் 30 ஆயிரம் பேர் அதிகம் என்பது குறிப்பிடதக்கது. சுமார் 41 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

தொகுதி மக்களுக்கான தேவைகள்…….

 

1.   அரக்கோணத்தில் மூடிவைக்கப்பட்டுள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையை மீண்டும் திறந்து,               உள்ளுர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

2.   சோளிங்கர் நகரில் உள்ள நரசிங்கபெருமாள் கோயில்க்கு ரோப் கார் அமைத்து தர வேண்டும்.

3.   ஆசியாவில் மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை             நகரை தூய்மை நகராக மாற்ற வேண்டும்.

4.   அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.

5.   திண்டிவனம் டூ நகரி இரயில் பாதை திட்டத்தை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும்.

6.   சோளிங்கர் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி உருவாக்க வேண்டும்.

 

கடந்த முறை எம்.பியாக, மத்தியஅமைச்சராக இருந்த ஜெகத்ரட்சகன், சென்னை டூ பெங்களுரூவுக்கு எக்கனாமிக்கல் காரிடர் கொண்டு வருவதற்கான பணியை செய்து வெற்றி பெற்றார். அதன்பின் வந்த பாஜக ஆட்சி அதனை நிறைவேற்றவில்லை. அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துயிருந்தால் சுமார் 1 லட்சம் பேருக்கு நேரடியாக - மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் என்கிறார்கள். அதனை சுட்டிக்காட்டி வாக்கு கேட்கவுள்ளார் என்கிறார்கள்.

 


தேர்தல் களத்தில் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், அதிமுக கூட்டணியில் பாமகவின் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகிய இருவரும் மோதலில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்