“மனுதர்மம் என்பது எப்போதோ எழுதப்பட்ட நூல் அல்ல. அது நடைமுறையில் இருக்கும் வாழ்வியல் முறை” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆ.ராசாவின் பேச்சு மனுதர்மத்தை விளக்கிய நடைமுறை. சூத்திர வகையை சார்ந்த இந்துக்களை மனு தர்மம் இழிவு படுத்துகிறது. அண்ணாமலை போன்றவர்கள், ‘எப்போதோ, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றிய மனுதர்மத்தை தேவை இல்லாமல் இப்போது விவாதிக்கிறார்’ என சொல்லுகிறார்கள். அந்த புத்தகத்தில் இருப்பதை நாம் பேசவில்லை.நடைமுறையில் இருப்பதைத் தான் நாம் பேசுகிறோம். இந்த சமூகம் மனு தர்மத்தின் அடிப்படையில் தான் வகைபடுத்தப்பட்டு இருக்கிறது. இன்னும் மனு தர்மம் தான் கோலாச்சுகிறது என்பதை அறியாமல் பேசுவது அரைவேக்காடானது.
மனுதர்மம் என்பது எப்போதோ எழுதப்பட்ட நூல் அல்ல. அது நடைமுறையில் இருக்கிற வாழ்வியல் முறை. அது மனிதர்களை பாழ்படுத்துகிறது. மனிதர்களை இழிவு படுத்துகிறது. அதைத்தான் சனாதனம் என நாம் சுட்டிக்காட்டுகிறோம். சமத்துவத்தை விரும்பக்கூடியவர்களாக இருந்தால் அண்ணாமலை உட்பட அனைவரும் சனாதனத்தை எதிர்க்க முன் வர வேண்டும். அமித்சா மோடி போன்றவர்கள் மனசாட்சிப் படி சிந்தித்து இந்த சனாதனத்தை எதிர்க்க முன் வர வேண்டும். ராசா அவர்களின் பேச்சு அவரின் பேச்சல்ல. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல. ஆனால் வேண்டுமென்றே திரித்து கூறப்படுகிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஆர் எஸ் எஸ் அமைப்பினருக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது. இதுவரை வடமாநிலங்களில் காணப்பட்ட காட்சிகள் இப்போது தமிழகத்தில் காணப்படுகிறது. ஜனநாயகம் என்னும் பெயரில் சங்பரிவார் கும்பல் தமிழகத்தில் மதவெறி அரசியலை விதைக்க முனைந்திருக்கிறார்கள். இதற்கு நீதிமன்ற அமைப்புகளே துணை போவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையோடு இத்தகைய பிரச்சனைகளை கவனிக்க வேண்டும்” எனக் கூறினார்.