திருச்சி விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
’’தமிழகத்தில் கடுமையான மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை காரணம் காட்டி இடைத்தேர்தல் ஒத்தி வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. 1979 – 80களில் கடும் பனிக்காலத்தில் கூட, நாடு முழுவதும் பொதுத்தேர்தல் நடந்துள்ளது. இந்த மழைக்காக, தேர்தல் நடத்தவில்லை என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல. அதே சமயம், ரெட் அலர்ட் அறிவிப்பு அ.தி.மு.க. வின் சூழ்ச்சி என்று சொல்ல முடியாது. வானிலை ஆய்வு மைய அறிவிப்புக்கும், தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை.
தேர்தல் ஆணையத்துக்கென அதிகாரங்கள் உள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்பு தள்ளி வைத்ததற்கான காரணம் தான் ஏற்க முடியவில்லை. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பல்கலை கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக, எந்த கவர்னரும் சொல்லாத ஒரு குற்றச்சாட்டை தற்போதுள்ள கவர்னரே குற்றம் சாட்டுவது இதுவே முதல் முறை.
இந்த முறைகேடு பேராசிரியர், உதவி பேராசிரியர் போன்றவர்கள் தேர்வு போன்றவற்றுக்கும் தொகை கொடுக்க வேண்டும். என்ற நிலை புரையோடி போய் உள்ளது. நேர்மையாக கல்லூரிகள் நடத்த முடியாத அளவுக்கு பணம் கொடுக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது எனவே தகுந்த விசாரணை நடத்தி, அதற்கு காரணமான அமைச்சர்கள் பதவி விலக்கப்பட வேண்டும்’’என்றார்.
உடன் மாநில மகளிர் அணி செயலாளர் மகபேரு மருத்துவர் ரொகையா, மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர்கள் சேரன், வெல்லமண்டி சோமு, ஆகியோர் இருந்தனர்.