Skip to main content

வாட்ஸ் அப் சபலத்தால் பறிபோன ரூ.24 லட்சம்..!!!

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

 

 

tamil selvi


   தனியாக இருக்கிறீர்களா..? தனிமையை எங்களுடன் கழியுங்கள்.! களிப்புற..! இப்படி குறுஞ்செய்திகள் நம்மைத் தேடி வந்து ஏமாற்றிய காலம் போய், முகம் பார்த்து பேசக்கூடிய வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வர ஏமாறுவது இன்னும் எளிமையாயிருக்கின்றது. ஆனால், இவரின் ஏமாற்றமோ வேறுவகை.


 
   " பெண்ணைக் கட்டித் தருவதாக எனக்கு வாக்குக் கொடுத்து விட்டு, என்னுடைய வயது சபலத்தைப் பயன்படுத்தி என்னுடனேப் பழகி பெண்ணையும் கட்டித் தராமல் ரூ.24 லட்சத்தை அபகரித்துவிட்டார். தயவு செய்து மீட்டுக்கொடுக்க வேண்டும்." என கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் சற்றுப் பதட்டத்துடனே ஆதாரங்களுடன் புகாராகக் கொடுத்தார் ஈராக் நாட்டில் வேலைப் பார்க்கும் பொறியாளர் ஒருவர்.

 

tamilselvi

 

" எனக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தினை சேர்ந்த தேவக்கோட்டை. ஈராக் விமானநிலையத்தில் பொறியாளராகப் பனியாற்றி வருகின்றேன். மாதம் ரூ2 லட்சம் சம்பளம் இந்திய மதிப்பில்.! கடந்த முறை விடுமுறையில் வரும்பொழுது ஊரிலிருந்த நண்பன் ஜம்பு மூலம் அறிமுகமானார் தமிழ்ச்செல்வி. அவரது கணவர் அதே ஊரிலுள்ள கல்லூரியில் தோட்ட வேலைக்காரர். இரண்டு பெண்கள். ஒரு பையன் அந்தப் பெண்ணிற்கு.! என்னைப் பார்த்தவுடனே, " தம்பி.! எம் பொண்ணு உனக்குத் தான்.! " எனக் கூறி அவரது மகள்களை அறிமுகப்படுத்தினார். அந்தப் பெண்மணியின் பாசமும், அவரது குடும்பத்தாரின் உபசரிப்பும் பாசத்திற்கு ஏங்கிய என்னை கட்டிப்போட்டது. என்னை மட்டுமல்லாமல், தனியாக இருந்த என்னுடைய அம்மா மேல் பாசத்தை அவர்கள் காட்ட, நானும் எனது அம்மாவிடம் இந்தப் பெண்மணியின் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன்." என உறுதியாகவும் கூறிவிட்டேன். அதே வேளையில், என்னுடைய சபலத்தைப் பயன்படுத்தி என்னுடனே நெருக்கமாகப் பழகினார் அந்தப் பெண்மணி. அவரின் மகளைக் கட்டுகிறோம் என உறுத்தல் இருந்தாலும், அந்தப் பெண்மணியின் பிடியிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. ஒருக்கட்டத்தில் விடுமுறை முடிந்து ஊருக்கே திரும்பி சென்றுவிட்டேன்.  இருப்பினும், தினசரி அவருடைய எண்ணிலிருந்து வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் அவரது பெண்ணிடம் பேசி வந்தேன். இடையிடையே அந்தப் பெண்மணி அதே போல் வீடியோ காலில் வந்து ஆபாசமாக பேசியதோடு மட்டுமில்லாமல் செய்கைகளும் செய்த வண்ணமிருப்பர். அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்யப்போகின்றோம் என நம்பி ஏறக்குறைய ரூ.24 லட்சத்தையும், எட்டு ஐபோன்களையும் கொடுத்துள்ளேன். இப்பொழுது நீ யார்..? எனக் கேட்கிறார். என்னைப் போன்று நிறைய இளைஞர்களும் அவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாட்ஸ் அப் சபலத்தால் நான் இழந்ததைப் போல், யாரும் ஏமாறக் கூடாது என்பதனால் தான் புகாரேக் கொடுத்தேன்." என்றார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த அந்த இளைஞர்.

 
   குற்றச்சாட்டுக்குள்ளான தமிழ்ச்செல்வியைத் தொடர்புக்கொண்டோம். பதிலில்லை..! காவல்நிலையத்தாரோ, இவர் கொடுத்த ஆபாச ஆதாரங்களை வாங்கி முதலில் முகம் சுளித்தாலும், அப்பாவியான இவர் ஏமாந்ததை உறுதிப்படுத்திவிட்டு தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்