நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில், மெர்சி என்பவர் எச்.ஆர்.பிரிவில் வேலை பார்த்து வந்தார். இதே ஜவுளிக்கடையில் ரவீந்திரன் என்ற இளைஞரும் வேலை பார்த்தார். ஒரே இடத்தில் வேலை என்பதால், இருவருக்கும் இடையே காதல் அரும்பியது. இந்த நிலையில், ரவீந்திரன் ஜவுளிக்கடை பணியில் இருந்து 2 மாதங்களுக்கு முன்னர் விலகினார். அதன் பிறகு மெர்சியும் அவரை விட்டு விலகிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த ரவீந்திரன், மெர்சியை நேரில் பேச அழைத்துள்ளார். ஜவுளிக்கடையில் இருந்து வெளியே சென்ற மெர்சி, வள்ளியூர் பேருந்து நிலையத்தின் ஓரம் நின்று ரவீந்திரனுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தாம் வேறு ஒருவரை காதலிப்பதாக மெர்சி சொல்லியிருக்கிறார். இதனால், கோபம் கொண்ட ரவீந்திரன், அவரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார். அங்கிருந்தவர்கள் அவரை விரட்டிப் பிடித்ததோடு, காயமடைந்த மெர்சியையும் அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே மெர்சி உயிரிழந்துவிட்டார். "காதலித்து ஏமாற்றினாள், அதனால் கொலை செய்தேன்" என போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளான் ரவீந்திரன்.