வறுமையினால் மொட்டையடித்து தலைமுடியை எடைக்கு விற்று அதில் கிடைத்த 150 ரூபாயைக்கொண்டு தனது குழந்தைகளின் பசியை போக்கியுள்ளார் கணவனை இழந்த இளம்பெண்.
சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்த செல்வம், வீரமனூர் செங்கல் சூளையில் வேலை பார்த்துவந்தார். சூளை முதலாளியிடம் வாங்கிய கடனை அடைக்க பலரிடம் கடன் வாங்கியுள்ளார். 5 லட்சத்திற்கு மேல் கடன் சுமை இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மூன்று ஆண் குழந்தைகளை வைத்துக்கொண்டு செல்வத்தின் மனைவி பிரேமா அல்லல் பட்டுக்கொண்டிருந்தார். வேறு வழியின்றி, செல்வம் வேலை பார்த்த செங்கல் சூளையிலேயே வேலைக்கு சேர்ந்தார். கடன்காரார்கள் அவரை தொந்தரவு செய்து வந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அனுப்பி வைத்துள்ளனர்.
வேலைக்கு போகாததால் கையில் பணமும் இல்லாத நிலையில், குழந்தைகளின் பசியை போக்க வேறு வழிதெரியாமல், தன் தலைமுடியை விற்று அதில் கிடைத்த 150 ரூபாய் பணத்தை வைத்து குழந்தைகளின் பசியை நீக்கியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த சமூக ஆர்வலர் பாலா என்பவர், பிரேமாவின் நிலையை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். வலைத்தள நண்பர்கள் மூலம் ஒரு லட்சம் கிடைத்துள்ளது. மேலும், பாலா மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொடுத்த பணத்தைக்கொண்டு கடனை அடைத்துள்ளார் பிரேமா.
பிரேமாவுக்கு இப்போது மாவட்ட நிர்வாகமும், மாதாந்திர உதவித்தொகை வழங்கி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.