மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்த அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனை அதிமுகவினர் சரமாரியாகத் தாக்கியதால் பரபரப்பு உண்டானது.
ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து,அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் சிவகங்கையில் நடைபெறும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டம் மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டமும் நேற்று மாலை நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அமமுக கட்சித் தொண்டர் ராஜேஸ்வரன், பழனிசாமி சென்ற அதே விமானத்தில் பயணம் செய்தார். பழனிசாமியை பார்த்து கோபமடைந்த அமமுக கட்சியின் தொண்டர் ராஜேஸ்வரன், எடப்பாடிக்கு எதிராக முழக்கமிட்டு வீடியோ பதிவு செய்தார். இதனைக் கண்ட பழனிசாமியின் பாதுகாவலர் ராஜேஸ்வரனிடம் இருந்து அவரது செல்போனை பறித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வீடியோவில் அவர் பேசும்போது, “எல்லோரும் பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடன் போய்க்கொண்டு இருப்பது எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணித்துக் கொண்டு உள்ளேன். அண்ணன் எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்; சசிகலாவிற்கு துரோகத்தை பண்ணியவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்நாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்” என்றார். அமமுக தொண்டர் பழனிசாமிக்கு எதிராக வீடியோ எடுத்து பேசிய தகவல் அதிமுகவினருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்த ராஜேஸ்வரனை அதிமுகவினர் சரமாரியாகத் தாக்கினர். இந்நிலையில் பழனிசாமிக்கு எதிராக பேசியவர் குறித்து விசாரித்த போது அவர் அமமுகவின் வெளிநாடு வாழ் மக்கள் தொடர்பு பிரிவின் சிவகங்கை மாவட்டச் செயலாளராக உள்ளார் என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரன் மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் ராஜேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ராஜேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.