![madakkulam vingayagar temple highcourt](http://image.nakkheeran.in/cdn/farfuture/gw-w_GA2T6HK_gHZODqbBxW7pkpA7ZMl-aKbsAZVoiA/1601920214/sites/default/files/inline-images/ZCadfasgedg.jpg)
புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியைப் பராமரித்து வருவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுவையில் பிரசித்தி பெற்றது மணக்குள விநாயகர் கோயில். அக்கோவிலின் யானை லட்சுமி, நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததால், பீட்டா அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில், புதுவை குருமாம்பேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வளாகப் பண்ணையில் வைத்து பராமரிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி உத்தரவின்படி, யானை மீண்டும் கோவில் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பீட்டா அமைப்பின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், நோய்வாய்ப்பட்டுள்ள யானையை சரணாலயத்துக்கோ, அல்லது மறுவாழ்வு முகாமுக்கோ அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, யானை லட்சுமி தற்போது பூரண உடல் நலத்துடன் இருப்பதாக புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து, சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இயற்கை சூழ்ந்த பகுதிக்கு தினந்தோறும் 2 முறை லட்சுமி அழைத்து செல்லப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, யானை லட்சுமியைப் பராமரித்து வருவது தொடர்பாக, நவம்பர் 6-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, புதுச்சேரி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.