சிறையில் இருந்து வந்த இளைஞர் மது போதையில் சாலை பணியாளரை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு காவலரையும் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி பகுதியை சேர்ந்த பேச்சிதுரை என்ற நபர் வழக்கு ஒன்றில் சிக்கி கடந்த வாரம் பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளிவந்த நிலையில், தன்னுடைய நண்பர் சந்துரு என்பவருடன் சேர்ந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த இருவரும் சாலையில் காரை நிறுத்தி ரகளை செய்து கொண்டிருந்தனர். அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சாலை பணியாளர் கருப்புசாமி என்பவர் இதனைத் தட்டிக் கேட்டுள்ளார்.
போதையில் ஆத்திரமடைந்த பேச்சிதுரை சாலைப் பணியாளர் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். அதன் பிறகு அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த தலைமைக் காவலர் செந்தில்குமார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அருகிலிருந்த வாழை தோப்புக்குள் பேச்சிதுரை தலைமறைவானான்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக காவல்துறையினர் பலர் அந்த பகுதியில் முகாமிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையை அடுத்து வாழை மர தோப்பில் பதுங்கி இருந்த பேச்சிதுரையை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அதன் பிறகு அவனுடன் சேர்ந்து ரகளையில் ஈடுபட்ட சந்துருவையும் போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.