தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால், மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு தடையாக உள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் தலையிட்டு விரைந்து உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று மூத்த வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பலமுறை இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதும், மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு வாய்தாக்களை கேட்டு வழக்கை தாமதப்படுத்தி வந்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், ‘அக்டோபர் இறுதிவாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். நவம்பரில் தேர்தலை நடத்தி முடித்துவிடுவோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் ஜெயசுகின் குறிக்கிட்டு, ‘கடந்த இரண்டரை ஆண்டாக, இதேபோன்று பல்வேறு காரணங்களை கூறி தேர்தலை நடத்தாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். மக்களவை தேர்தலை நடத்தியபோது, தொகுதி சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்பட்டது எப்படி? எனவே, மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தியது போல், மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்’ என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, ‘அக்டோபர் இறுதி வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பாணை மற்றும் தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவால், வருகிற அக்டோபர் இறுதி வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டிய நெருக்கடிக்கு ஏற்பட்டுள்ளது தமிழக அரசுக்கு.