சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த எப்.ஐ.ஆரில் ஞானசேகரன் யாரோ ஒருவரை ‘சார்’ எனக் குறிப்பிட்டு பேசியதாகக் கூறப்பட்டது. அந்த சார் யார்? என அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்து, 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. விசாரணையில் தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. முன்னதாக ஞானசேகரன் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும், அதை வைத்து பண்ணை வீட்டை வாங்கி அதில் வசித்து வந்ததோடு, இதேபோல் பல்வேறு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது ஏற்கெனவே 3 முறை குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், 4வது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.