தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று (07.08.2023) அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகே இருந்து கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
இதற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது கனவுகள் நிறைவேறும் காலம்’ எனும் தலைப்பில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தாலாட்டில் தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் பக்கத்தில் கனிந்த இதயத்தோடு ஓய்வெடுக்கும் தலைவர் கலைஞரே” என ஆரம்பிக்கும் அந்தக் காணொளியில், “உங்களுக்குச் சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன். உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம் தலைவரே...” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். “உங்கள் உழைப்பின் உருவக வடிவம் தான் இந்த நவீன தமிழ்நாடு. நீங்கள் உருவாக்கிய நவீன தமிழ்நாட்டை இடையில் புகுந்த கொத்தடிமைக் கூட்டம், சிதைத்ததின் விளைவாகத் தாழ்வுற்றது தமிழ்நாடு. தாழ்வுற்ற தமிழ்நாட்டை மீட்டெடுத்து மீண்டும் உங்கள் ஆட்சிக் கால தமிழ்நாடாக உருவாக்கி வளர்த்தெடுக்க எந்நாளும் உழைத்து வருகிறேன். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு..’ என்றீர்கள். அந்தக் கரகர குரல்தான் கண்டிப்பு குரலாக என்னை உழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள மணற் பரப்பில் திமுக இலக்கிய அணி சார்பில் கலைஞரின் மணல் சிற்ப ஓவியம் வரையப்பட்டது. இதனைத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அமைச்சர் பொன்முடி, அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.