கரோனா பரவல் தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் கரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பரவலைத் தீவிரமாக கண்காணிக்கப்படாவிடில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் பெருங்குடி, அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், "இணை நோய் உள்ளவர்களும், முதியவர்களும் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கரோனா அறிகுறி உள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.