![Two tea shops were looted in a pre-hostile dispute](http://image.nakkheeran.in/cdn/farfuture/MX5pnSLEu0ugCKgNVlp8Rrh5NEMPVQ0Ys7xaE5z2WDQ/1699772425/sites/default/files/inline-images/993-ashok_197.jpg)
ஒரே சாலையில் எதிர் எதிரே இரண்டு கடைக்காரர்கள் மாற்றி மாற்றி கடைகளை அடித்து நொறுக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பாக்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேருந்து நிலையம் அருகே குடியாத்தம் சாலையில், நாராயணன் என்பவர் டீ கடை வைத்துள்ளார். அந்தக் கடைக்கு எதிரே பாபு என்பவர் டீ கடை வைத்துள்ளார். வாடிக்கையாளர்கள் தனது கடையில் டீ குடிக்க ஆர்வம் காட்டாமல் நாராயணன் கடைக்குச் செல்வதால், பாபுவுக்கு நாராயணன் டீ கடை மீது கோபம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எந்நேரமும் நாராயணன் டீ கடையில் கூட்டம் இருக்குமாம். தனது கடையில் டீ குடிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் ஆத்திரமடைந்த பாபு, இரவு நாராயணனின் டீக்கடையை அடித்து உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாராயணன், பாபுவின் டீ கடையை அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.
இவை அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. இந்நிலையில், பள்ளிகொண்டாவில் இரவில் 2 டீக்கடைகளை அடித்து நொறுக்கியதால் அப்பகுதியே பரபரப்பானது. இது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் பள்ளிகொண்டா காவல்நிலைய அதிகாரிகளிடம் விசாரித்ததும், பள்ளிகொண்டா போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து கடை உடைக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.