Skip to main content

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு; வேளாண் பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

Rs.5 lakh prize for farmers; New Government Announcement on Agriculture Budget

 

கம்பு, கேழ்வரகு, தினை, சாமை போன்ற பயிர்களையும், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்களையும் அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

அடுத்த நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மூன்றாவது முறையாக அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார்.

 

பச்சைநிறத்துண்டு அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “வேளாண்மையே மனிதன் மேற்கொண்ட முதல் தொழில் என்கிறது மானுடவியல்; வேளாண்மை என்பது தொழில்முறை அல்ல, வாழ்க்கை முறை; உழவர்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்; நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்பட்டுள்ளது; 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர்.

 

கடந்த 2 ஆண்டுகளில் 1,50,000 புதிய வேளாண் மின் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன; தமிழ்நாடு அரசால் 1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு 783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும்” என அமைச்சர் எம்.ஆர்.கெ. பன்னீர்செல்வம் கூறினார்.

 

மேலும், வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை, சிறுதானியங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.82 கோடியில் திட்டம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை, கம்பு, கேழ்வரகு, தினை, சாமை போன்ற போன்ற பயிர்களுக்கும், சிறு தானியங்கள் எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்களையும் அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். நெல் பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு மட்டும் ரூ.5 லட்சம் பரிசினை தமிழக அரசு வழங்கி வந்தது. நெல்லுக்கு வழங்கி வந்த பரிசு தற்போது அனைத்து பயிர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதால் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது, தானியங்கள் மட்டுமல்லாது, காய்கறி, பழங்களை போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமான சவால்; புன்செய் நிலங்களிலும் மகசூலை அதிகப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்