![LAND STRUGGLE IN ERODE](http://image.nakkheeran.in/cdn/farfuture/U4tQMAW_Q2jPVKce-WpTSkixQU_7JCt8vJEi9A2KezY/1601320528/sites/default/files/inline-images/XDaDADAD.jpg)
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனர். இன்று காலை அருந்ததியர் இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ராமன் தலைமையில் அதன் நிர்வாகிகள் வந்து பெட்டியில் மனு போட்டனர். பிறகு வடிவேல் ராமன் கூறும்போது,
"ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியையடுத்த நஞ்சை ஊத்துக்குழி பகுதியில் சுமார் 100 ஏக்கர் தரிசு நிலத்தை, நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் நில சீர்திருத்த துறை மூலம் அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் சுமார் 100 நபர்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நில ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அந்த நிலங்கள் தரிசு நிலமாக உள்ளதால் பாசன வசதி இல்லை. இதனால் இங்கு எவ்வித விவசாயப் பணியும் மேற்கொள்ளாமல் நிலம் பெற்றவர்கள் இருந்தனர்.
இந்தநிலையில் வசதி படைத்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலர் குறைந்த விலைக்கு அம்மக்களிடமிருந்து அந்த நிலத்தை எழுதி வாங்கி விட்டார்கள். தற்போது அந்த இடத்தில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. வருவாய்த் துறை ஆவணங்களில் நில ஒதுக்கீடு பெற்ற பட்டியலின மக்களின் பெயர் உள்ளது. எனவே, இதுகுறித்து அரசு உரிய விசாரணையை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு அரசுப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு போதுமான நிலத்தை ஒதுக்கித் தரவேண்டும். அரசு இதைச் செய்யவில்லையென்றால் விரைவில் நில மீட்பு போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.