சென்னை பல்லவன் போக்குவரத்துக் கழகம் இல்லத்தின் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய சி.ஐ.டி.யு. ஆறுமுக நயினார், ''ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த மாதம் சம்பளம் கொடுத்தார்கள். இந்த மாதம் ஒவ்வொரு தொழிலாளர்களின் சொந்த விடுப்பில் 5, 6 நாட்கள் கழித்து கொடுத்துள்ளார்கள். சம்பளத்தில் குளறுபடி செய்திருக்கிறார்கள். முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் இன்று போராட்டம் நடத்தினோம். போக்குவரத்து கழக எம்.டி. எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக இதற்குத் தீர்வு காண்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தைக் கைவிட்டோம்'' எனத் தெரிவித்தார்.