சேலத்தில் சூதாட்டம் மற்றும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்த மூன்று ரவுடிகளை காவல்துறையினர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் அம்மாபேட்டை குமரகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற சிவபிரகாசம் (38). இவருடைய வீட்டில் சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலின்பேரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்மாபேட்டை காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கு பிரகாஷ் கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். நிகழ்விடத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்கம், 17 செல்போன்கள், 5 சீட்டு கட்டுகள், கொடுவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரகாஷ், பிணையில் வெளியே வந்தார். அதன்பிறகும் அவர் திருந்தி வாழாமல் குற்றச் செயல்களில் ஈடுபட்டார். கடந்த ஜனவரி 1ம் தேதி பிரகாஷ், குமரகிரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மீது முன்விரோதம் காரணமாக மிளகாய்ப்பொட்டி தூவி அரிவாளால் தாக்கியுள்ளார். இந்த வழக்கிலும் அவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
மீண்டும் பிணையில் வெளியே வந்த அவர், கடந்த மார்ச் 24ம் தேதி, பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த ரியாஸ் என்பவரிடம் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். ரியாஸ் அளித்த புகாரின்பேரில் பிரகாஷை கைது செய்து காவல்துறையினர் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதே போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக அவர் மீது ஏற்கனவே 2018ம் ஆண்டு ஒருமுறை குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. எனினும், அவர் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் பிரகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷை, ஏப். 20ம் தேதி இரண்டாவது முறையாக காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
அதேபோல், சேலம் ஜாகீர் சின்ன அம்மாபாளையத்தைச் சேர்ந்த பகலவன் என்கிற பழனி என்கிற சதீஸ்குமார் (37), மணிவேல் (27) ஆகிய இரண்டு ரவுடிகளும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். பகலவனும், மணிவேலுவும் சேர்ந்து கொண்டு ஏப். 11ம் தேதி, ஓமலூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மாமாங்கம் முதன்மைச் சாலையில் நடந்து வந்தபோது, அவரிடம் கத்தி முனையில் 2,100 ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்களிடம் விசாரணை நடத்தியதில் மேலும் சில வழிப்பறிச் சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அம்மாபேட்டை, சூரமங்கலம் காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர். அவர்களின் பரிந்துரையை மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி, ஆணையர் நஜ்மல் ஹோடாவுக்கு சிபாரிசு செய்தார்.
ஆணையரின் உத்தரவின்பேரில் பிரகாஷ், மணிவேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஒரே நாளில், மூன்று ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்த சம்பவம், ரவுடிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.