அண்மையில் நடிகர் சிம்பு செய்தியாளர்கள் சந்திப்பில், "காவிரி தண்ணீருக்கு மாநில அரசோ மத்திய அரசோ தீர்வைக் கொண்டுவராது. காவிரி சம்பந்தப்பட்ட இரு மாநில மக்களும் ஒற்றுமையுடன் தாய் மகன் போல செயல்பட வேண்டும், அப்படி அறவழியில் கேட்டால் தண்ணீர் தராமலா போகிறார்கள்?" என்றும், "அரசியல் கட்சிகளுக்கு முன்னும், நீதிமன்றம் முன்னும் தீர்வை தேடியது போதும். ஒருபோதும் அவை தீர்வைத்தராது" என்றும் கூறிய சிம்பு இதற்கான ஒரு புதிய கருத்தையும் இரு மாநில மக்களிடமும் வைத்தார்.
அதாவது "இந்த காவிரி நீர் பிரச்சனையை மக்கள் கையிலேயே விட்டுவிடலாம். கர்நாடகாவிலுள்ள கன்னட மக்கள் வரும் பதினோராம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் ஒரு குவளை தண்ணீரை எடுத்து அங்கே வாழும் தமிழர்களுக்கு கொடுத்து நீர் அருந்த செய்து தாங்கள் தண்ணீர் தர தயாராய் இருக்கிறோம் என்ற நோக்கில் வீடியோ எடுத்து 'யுனைடெட் பார் ஹுமானிட்டி' ஹாஷ் டாக் டேக் மூலம் உங்களின் எண்ணத்தை வெளிப்படுத்துங்கள் அதை வைத்தே நாங்கள் புரிந்து கொள்கிறோம் என கூறியிருந்தார்.
அதை ஆதரித்து இன்று 11-ஆம் தேதி ட்விட்டர் போன்ற பல சமூக வலைத்தளங்களில் கன்னட மக்கள் தமிழர்களுக்கு நீர் கொடுத்து அருந்த வைத்து தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிம்புவின் இந்த முதிர்ச்சியான யோசனையை சில கன்னட நடிகர்கள் பிரபலங்கள் ஆதரித்து வருகின்றனர். எப்படியோ சிம்பு தமிழக பிரச்சனைகளின் போது ஆவேசமாக குரல் கொடுப்பதுமட்டுமின்றி அவர் கொடுக்கும் சில ஐடியாக்கள் சிறிதளவு பலித்தும் வருகிறது.