புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில், டாக்டர் கலைஞர் காலை சிற்றுண்டி திட்டத் தொடக்க விழா நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் முதலமைச்சர் நாராயணசாமி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.
இதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி மற்றும் சாம்பார் சட்னி வழங்கப்படும் என்றும், இதேபோன்று மாகே பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, பொட்டுக்கடலை, கோதுமை உப்புமா, சட்னி வழங்கப்படும் என்றும், ஏனாம் பள்ளி மாணவர்களுக்கு உப்புமா சட்னி, தக்காளி சாதம் சட்னி, கிச்சடி சட்னி, கோதுமை உப்புமா சட்னி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள மொத்தம் 81,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.