காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று (9.4.2018) அளித்த தீர்ப்புக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ள கருத்து வருமாறு:
உச்சநீதிமன்றத்தின் இன்றைய அறிவிப்பு ஏமாற்றத்தைத்தான் நமக்குத் தருகிறது. ஆறு வார அவகாச காலம் கூறியதைக் கண்டு கொள்ளாததுபோல் உள்ளதோடு, மே 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து, மத்திய அரசிடம் வரைவுத் திட்டத்தை கேட்பது பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தவில்லை. மாறாக, மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு மறைமுகமான இசைவையும், இணக்கத்தையும்தான் தருவதாக அமைந்துள்ளதுபோல் தோன்றுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்றும், வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.