அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா தலைமை கழகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் எம்.ஜி.ஆரால் இதே நாளில் ஆரம்பித்த இயக்கமாகும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் சிதறி விடும் என நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இன்னும் 3 ஆண்டில் பொன்விழா வருகிறது. அதையும் நாங்கள் தான் கொண்டாடுவோம். 100 ஆண்டு வரும்போது அந்த விழாவையும் நாங்கள்தான் கொண்டாடுவோம்.
அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்கப் போவதாக தினகரன் கூறுகிறார். அவரால் அது முடியவே முடியாது. கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க நினைக்கிறார். அதுவும் முடியாது. முதலில் அவர் ஆர்.கே.நகரில் ராஜினாமா செய்து விட்டு திரும்ப நின்று ஜெயிக்கட்டும். அதுவும் அவரால் முடியாது.
எனவே கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் பார்த்தானாம். அந்த மாதிரி கதையா இருக்கிறது. அவரிடம் ஏதோ ஒரு 5 சதவீதம் அளவுக்கு ஆட்கள் உள்ளனர். அவர்களுக்காக ஏதேதோ சொல்கிறார். எனவே ஒன்றும் நடக்க போவதில்லை. கடல்வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு குடல்வற்றி செத்து போன கதைதான் தினகரனின் கதை. இவ்வாறு கூறினார்.