திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே கணவாய்ப்பட்டி, ஆசிரமம் காலனியில் அமைந்துள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த காப்பகத்தில் தங்கி இருக்கும் முதியோர்களுக்கு மழைக்கால தேவைக்கான வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சாதன பொருட்களை ரோட்டரி சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். மேலும் சோலார் விளக்குகள் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் போது அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் ஆதரவற்ற முதியோர்களை சந்திக்க வருகை தந்தனர். அவர்கள் வரும்போது முதியவர்களுக்கு தேவையான பொருள்களை தங்கள் வீட்டில் இருந்து தங்கள் பெற்றோர்களிடம் கேட்டு பெற்று எடுத்து வந்திருந்தனர்.
அதில் முதியவர்கள் பயன்பாட்டிற்காக சட்டைகள், வேஷ்டிகள், சேலைகள் மற்றும் போர்வை போன்ற துணி வகைகள், மற்றும் அரிசி, கோதுமை, பிஸ்கட், மளிகை சாமான் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை முதியவர்களுக்கு வழங்கினர்.
மேலும் தங்கள் சிறுக சேர்த்து வைத்த ரூ. 8500யையும் காப்பகத்திற்கு வழங்கினர். பள்ளிக் குழந்தைகளின் பாசத்தில் மூழ்கிப்போன முதியவர்கள் அவர்களை ஆசீர்வாதம் செய்து பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்